மாதிரிப்படம்
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்த பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வேட்டி, சேலை பாதிப்பேருக்குக் கிடைக்கவில்லை ஆனால் மற்ற பொருட்களும் பணமும் வழங்கப்பட்டது. அதே போல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்திலும் பொங்கல் தொகுப்பு வழங்கிய போது முதியவர்களின் பணத்தில் ரூ.500 எடுத்துக் கொண்டு ரூ.2500 மட்டும் வழங்கிய பிரச்சனை சம்பந்தமாகக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.
அதாவது, அறந்தாங்கி அருகில் உள்ள ராஜேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (வயது 30) 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூத்தாடிவயல் அங்காடி விற்பனையாளராக பணிக்கு வந்துள்ளார். இவர் தான் தற்போது தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் முதியோர்களைத் தேர்ந்தெடுத்து சுமார் 12 பேரிடம் கைரேகை பதிவு செய்து கொண்டு தலா ரூ.500 பிடித்துக் கொண்டு ரூ.2500 மட்டும் கொடுத்துள்ளார். அங்காடி ஊழியர் முதியவர்களிடம் பணத்தை எடுத்துக் கொண்டது வெளியே தெரியவந்தது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்யத் தொடங்கினார். மற்றொருபுறம், பணத்தை எடுத்தவர்களின் வீடு தேடிச் சென்று எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து அதிகாரிகள் விசாரணைக்கு வந்தால் பணம் எடுக்கவில்லை முழு தொகையும் கொடுத்துவிட்டதாகக் கூறச் சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். முதியவர்களிடம் பணம் பறித்த அங்காடி ஊழியர் ஏற்கனவே எத்தனை பேரின் ரேசன் பொருட்களைத் திருடினாரோ? ஆகவே துறை விசாரணை முடிவில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
Follow Us