திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (08-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திருப்பரங்குன்றத்தில் என்ன நிலைமை இருக்கிறது என்று அனைவரும் பார்க்கிறோம். உள்ளூர் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு கூட காலையில் 3,000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயில் மலைக்கு போய் கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கே அமைதி நிலவுகிறது. வெளியே இருந்து அங்கே சென்று அங்கு கலவரம் செய்ய பார்க்கிறார்கள். அயோத்தியில் கூட யார் முதன் முதலில் கலவரத்தை ஆரம்பித்தது? மண்டல் கமிஷன் வெளியான உடனேயே குஜராத்தில் இருந்த அத்வானி தான் ரத யாத்திரையை தலைமை தாங்கி செய்தார். அதனால் இங்கு ஒரு குழப்பத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

Advertisment

ஆனால், மதுரை மண் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மண். அந்நியர்களை உள்ளே விடாது, மற்றவர்களுக்கு இடம் கொடுக்காது. இந்த மண்ணினுடைய பெருமை அறியாதவர்கள் சீண்டி பார்க்கிறார்கள். இதே மண்ணில் தான் திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தை அறநிலையத்துறை சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தினார்கள். ஒரு அசம்பாவிதமும் கூட நடக்கவில்லை. அதே போல் திருச்செந்தூர் முருகனுக்கு சூர சம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கேயும் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். எல்லா ஆண்டையும் விட இந்த ஆண்டு அதிகமாக கூட்டம் கூடியது. ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆக மக்களும், பக்தர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னாடி தான் இருக்கிறார்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் கூட அப்பாவையும் பிள்ளையையும் அவர்கள் பிரித்துவிட்டார்கள். ராமதாஸின் பா.ம.க இரண்டு கூறாக நிற்கிறது. அதிமுக நான்கு கூறாக நிற்கிறது. திமுகவை தான் மோடியாலும், அமித்ஷாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்கள் கற்ற எல்லா வித்தையையும் முறியடித்த ஒரே பெருமை எங்கள் முதல்வருக்கு தான் இருக்கிறது” என்று கூறினார்.

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment