2026 சட்டமன்றத் தேர்தலின் நல்ல துவக்கமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்து, அதன் மூலம் இரண்டாவது முறையாக மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கப் போகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
மார்ச் 1 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மடுகரை மந்தவெளித் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்லாட்சி நடைபெறுவதைப் போல புதுச்சேரி மாநிலத்திலும் ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும். இதுவரை நம்முடன் கூட்டணியில் இல்லாத தேமுதிக தற்போது நம்முடன் கூட்டணியில் இணைந்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலின் நல்ல துவக்கமாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவது நாம் தான். இந்தியாவிலேயே உச்சத்தில் இருக்கிற ஒரு தலைவராக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய உழைப்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் என பொத்தாம் பொதுவாக பேசுபவர்கள், தலைவர் மு.க. ஸ்டாலினுடைய வரலாற்றைப் படித்துப் பார்க்க வேண்டும். இன்று புதிது புதிதாக ஒரு சிலர் கட்சி ஆரம்பிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் அறியாமையால், வரலாறு தெரியாத காரணத்தினால் அங்கு போய் சேருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கான திட்டத்தை பார்த்து பார்த்து செய்து வருகிறார். அதன் விளைவு வருகின்ற 2026 தேர்தலில் பெண்களின் ஓட்டு ஒட்டுமொத்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கப் போகிறது. அதன் மூலம் இரண்டாவது முறையாக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கப் போகிறார். தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியிலும் 30 தொகுதிகளிலும் திமுக தயாராக இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் திமுக தொண்டன் நினைப்பது நிச்சயம் நடைபெறும் என உறுதியாக கூறுகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112415809z-arv-2026-02-07-16-54-11.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/21/rsbhara-2026-02-21-16-14-35.jpg)