ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்திலிருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை?. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், “சட்டமன்றத்தில் இருந்து 3ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், தமிழ்நாடு மரபைக் கடைப்பிடிக்க முயன்றால், அதனை தனது அவதூறு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும்.
ஆளுநர் ரவி 2022ஆம் ஆண்டு தனது முதல் உரையைச் சட்டமன்றத்தில் ஆற்றிய போது உரையை முழுமையாகப் படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்றெல்லாம் ஆளுநர் ரவி சண்டித்தனம் செய்யவில்லை. அதன்பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். 2023ஆம் ஆண்டு உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/rn-ravi-smile-2026-01-20-17-03-09.jpg)
2024ஆம் ஆண்டு உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனப் புதுக்கதை எழுதினார் ஆளுநர் ரவி. உரையை வாசிக்காமல் அமர்ந்தார். 2025ஆம் ஆண்டு முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும். எழுப்பி, அவையிலிருந்து உரையை வாசிக்காமல் போனார். இப்போதும் அதே பல்லவிதான். 2022இல் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரவி, 2024க்கு பிறகு சண்டித்தனம் செய்வதற்குக் காரணம் அரசியல். ஆளுநர் ரவி ஆளுநராக வந்த போது தனது உரையை முழுமையாகப் படித்தவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் சாக்குப்போக்கு சொல்லிப் பேச மறுத்ததற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள்.
தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு. 2022இல் ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரவி, பிறகு ஏன் பல்டி அடித்ததற்கான காரணத்தைச் சொல்லுவாரா?. பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவின் சித்தாதங்களை அப்படியே உரையில் ஆளுநர்கள் வார்த்தெடுப்பார்கள். பாஜக அல்லாத மாநிலங்கள் என்றால் எதிர்ப்பு காட்டுவார்கள். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019ஆம் ஆண்டு இதே ஜனவரியில் நடைபெற்ற போது நிகழ்ந்த சம்பவம் ஆளுநர் ரவிக்கு நினைவிருக்கிறதா?. பிரதமர் மோடி பங்கேற்ற அந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாகத் தேசிய கீதம் பாடப்படவில்லை. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை?.
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். ஆனால், தேசிய கீதத்தைப் புறக்கணித்துவிட்டது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த அரசியல்வாதியைப் போல ஆளுநர் ரவி முயல்கிறார். சட்டசபையில் ஆளுநர் உரையாற்றி முடிந்த பிறகுதான் தேசிய கீதம் இசைக்கப்படும். தொன்றுதொட்டு இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையும் புறக்கணித்துச் சென்று விட்டார் ஆளுநர் ரவி. தேசிய கீதத்தில் வரும் திராவிட வார்த்தையைக் கேட்க விரும்பாமல் போயிருப்பார் போல. சட்ட விதிகளையும் மரபுகளையும் செயல்படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் ஆளுநரே, அதனையெல்லாம் மீறிச் செயல்பட்டிருப்பது இந்தியாவில் எந்தச் சட்டமன்றத்திலும் நடக்காத நிகழ்வு.
‘சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை; ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது; சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது’ என்றெல்லாம் பேசுவது எதிர்க் கட்சிகள் அல்ல; ஆளுநர் ரவி என்பது ஆளுநர் மாளிகைக்கே இழுக்கு. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஏற்கெனவே நான்கு பேர் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது அவர்களுக்குப் போட்டியாக அவர்களின் குரலையே பேச ஆளுநர் பதவி தேவையில்லை. எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்திற்குள் ரவி வந்து, கருத்து சொல்லியிருக்கலாம். அதற்கு ஏன் ஆளுநர் ஆடையைத் தரித்து வந்திருக்க வேண்டும்?. மக்கள் பவனுக்குள் கமலாலயத்தின் குரல்கள் ஏன் கேட்க வேண்டும்?. ஆளுநர் அவர்களே.. அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/raj-bhavan-rn-ravi-2026-01-20-17-04-05.jpg)
‘அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை. ‘தொழில்முனைவோர் வேறு மாநிலத்திற்குச் செல்லும் நிலை’ என விளக்கம் சொல்லியிருக்கிறது ஆளுநர் மாளிகை. அது உண்மை என்றால், தொழில் வாய்ப்புகளுக்காக வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஏன் தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள். தொழில் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் இருப்பதால்தானே! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தலித்துகள் மீதான தாக்குதல், போதைப் பொருட்கள் பற்றியெல்லாம் ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சமும் வெட்கப்பட மாட்டீர்களா ஆளுநர் அவர்களே..
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் போட்டி போடுவதற்கு எதற்கு ஆளுநர் பதவி?. கமலாலயத்தின் ஒரு மூளையிலேயே ஆளுநர் மாளிகையை நடத்திக் கொள்ளலாமே. கிண்டியில் உள்ள ராஜ்பவனின் 156 ஏக்கர் பரப்பளவு இடமாவது மிச்சமாகுமே. அவ்தார் (AVTAR) குழுமத்தின் அறிக்கை கொஞ்சம் எடுத்துப் படித்துப் பாருங்கள் ஆளுநர் அவர்களே. பெண்களுக்கான டாப் நகரங்கள் 2025 என்கிற அவ்தார் குழுமத்தின் அறிக்கையில் பெண்களுக்கான பாதுகாப்பை உள்ளடக்கிய சமூக உள்ளடக்க மதிப்பீட்டில் (SOCIAL INCLUSION SCORE) தொடர்ந்து 4வது ஆண்டாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/tn-sec-2026-01-20-17-04-37.jpg)
பெண்கள் வாழ்வதற்கு உகந்த தன்மை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் சமூக உள்ளடக்க மதிப்பீட்டில் 48.16 புள்ளிகளைப் பெற்று இந்தியாவிலேயே நம்பர் 1 பாதுகாப்பான நகரம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது சென்னை. பெண்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய சமூக உள்ளடக்க மதிப்பீட்டின் அடிப்படையிலான 125 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பான டாப் 10 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?. ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார் என்பது அவருடைய நடவடிக்கைகள் அப்பட்டமாக வெளிக் காட்டுகின்றன. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாக வருகிறார். ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் வென்று அரசியல் செய்யட்டும். ஆளுநர் பதவியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 இருக்கைகளில் ஏதாவது ஒன்றில் அமர வேண்டும் என ஆசைப்பட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவைக்குள் வாருங்கள். ஆளுநர் வேடம் தரித்துக் கொண்டு வராதீர்கள். அது புனிதமான பதவி. அதற்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/central-vista-1-2026-01-20-17-04-58.jpg)
தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கல்வித்தரத்தின் உயர்வையும் ஒன்றிய அரசே பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் விளக்கி இருக்கிறது. ஆனால், ஆளுநரோ இன்னும் பீகாரிலோ, உத்தரப்பிரதேசத்திலோதான் இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு, தொடர்ந்து தமிழ்நாடு மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் வன்மத்தைக் கக்குகிறார். அரசியலமைப்பின் மரபையும் சட்டப்பேரவை மாண்பையும் தமிழ்நாடு மதிப்பதனால்தான் ஆளுநர் உரை வாசிக்க அவர் அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு கடைப்பிடிக்கும் கண்ணியத்தை ஆளுநர் கடைப்பிடிப்பதே இல்லை. வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவியையும் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அந்த செயல்திட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட ஆர்.என். ரவி, கடந்த 4 ஆண்டுகளாகச் சட்டப்பேரவை மாண்பை அவமதித்து வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக கொடுத்த செயல்திட்டமே ஆர்.என். ரவியின் இன்றைய செயல்பாடுகள். ஆட்டுக்குத் தாடி போல் நாட்டுக்கு ஆளுநர் பதவி தேவையற்றது என்பது திமுகவின் கொள்கை முழக்கம் என்றாலும் அரசியலமைப்பைச் சட்டத்தை மதித்து ஆளுநர் பதவிக்குரிய மரியாதையை திமுக ஆட்சி தந்துகொண்டிருக்கிறது. ஆனால், காலாவதியான பதவியில் அமர்ந்து கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அசிங்கப்படுவதற்கே அவதாரம் எடுத்தவர் நான் என்பது போல இறுமாப்புடன் நடந்து கொள்கிறார் ஆளுநர் ரவி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/rn-ravi-2026-01-20-17-05-16.jpg)
ஆர்.என்.ரவி, ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தகுதிகளைக் கொண்ட நபராகத் தன்னைக் கருதாமல் தன்னை ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராகவும், பாஜக தலைவராகவும் முன்னிலைப்படுத்துவதையே விரும்புகிறார் என்றால் கமலாலயத்தின் ஒரு மூளையில் அமர்ந்து கொள்ளலாம். அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தால் பல்வேறு நேரங்களில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறார் எனக் குட்டு வாங்கிய பெருமைக்குரியவர் இந்தியாவிலேயே ஆளுநர் ரவி மட்டும்தான்.
இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்றத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆளுநர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us