அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு முன்பு, குற்றம் சாட்டியது. அதாவது இந்த துறையில் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழல் ரூ.1,020 கோடி வரை நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது திமுக அரசும் காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனால் இதையடுத்தும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என இன்பதுரை எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார். அதோடு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிநாராயணனும், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “இந்த வழக்கு விசித்திரமானது. பல ஆண்டுகள் ஒரு வங்கி கடன் வாங்கியது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி சில ஆவணங்கள் எடுத்ததாக அவர்கள் சொன்னார்கள். அதற்கு பின்னால், நேரு அந்த சிபிஐ தொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தார். அது தான் முக்கியமான வழக்கு. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த நேரத்தில் சிபிஐ போட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது. அமலாக்கத்துறையிடம் ஏதாவது ஆதாரங்கள் இருந்திருந்தால் அவர்களே கொடுத்திருப்பார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைத்தது.
தமிழக முதல்வர் இந்த வழக்கை உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அதிமுக எம்.பி இன்பதுரை ஒரு வழக்கை போட்டிருக்கிறார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே அரசாங்கம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிற காரணத்தினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் இது பெரிய விஷயம் அல்ல. எனவே டிவிஎஸ் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். திமுகவை பொறுத்தவரையில் இதுபோன்ற இந்த பல வழக்குகளை பார்த்திருக்கிறோம். குறிப்பாக கே.என்.நேரு மீது ஜெயலலிதா பல வழக்குகளை போட்டிருக்கிறார். அதை எல்லாம் சட்டரீதியாக சந்தித்து அந்த வழக்குகளை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். எனவே, சட்டரீதியாக இதை சந்தித்து தவிடு பொடியாக்குவதற்கு திமுக சட்டத்துறை தயாராக இருக்கிறது. 41 தொகுதிக்கு பொறுப்பாளராக தலைவராக நியமிக்கப்பட்டவர் தான் கே.என்.நேரு. 41 தொகுதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய அளவுக்கு அவர் களத்தை சரிபார்த்து வைத்திருக்கிறார். இந்த பொறாமையில் வயிற்று எரிச்சலில் பா.ஜ.க அரசு, இங்கே இருக்கிற எடப்பாடி பழனிசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறது. நிச்சயமாக தேர்தலில் மிகப்பெரிய அடி உங்களுக்கு விழ போகிறது. எந்த சோதனை வந்தாலும் கே.என்.நேரு சட்டரீதியாக வென்று வெற்றி கொடி நாட்டுவார் ” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/rsbharkn-2026-02-20-16-52-53.jpg)