பீகார் மாநிலத்தில், வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி நேற்று (30-10-25) பீகாரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் ஒருவர், ஒரு பேரணியின் போது, ​​பீகாரைச் சேர்ந்த மக்களை பஞ்சாபிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். அந்த நேரத்தில், காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகள், தற்போது எம்.பி.யாக உள்ளார், மேடையில் இருந்தபடி, பஞ்சாப் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு கைதட்டிக் கொண்டிருந்தார். கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களைத் திட்டுகிறார்கள், மேலும் அவர்களின் கூட்டணிக் கட்சியான திமுகவும் தமிழ்நாட்டில் பீகாரியை திட்டுகிறது. தமிழ்நாட்டில் திமுகவினர் பிகரை சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர். இந்தத் தேர்தல்களின் போது, ​​தங்கள் மாநிலங்களில் பீகாரியை திட்டிய தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்” என்று பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் பீகாரில் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருந்தது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இதனால் பிரதமர் மோடி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து யூடியூப்பில் வெளியிட்டார்கள் அது சம்பந்தமாக பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இப்படி ஒரு செய்தி வந்த உடனே, பீகாரிகள் தாக்கப்படுவது உண்மைதானா என்பதை அறிய நிதிஷ் குமார் அன்றைக்கு ஒரு சிறப்பு குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். அந்த ஆய்வில், தமிழ்நாட்டில் பீகாரிகள் நிம்மதியாகவும் சிறப்பாகவும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தது.
அதை பிரதமர் மோடி படித்து பார்க்க வேண்டும். இதை கூட பிரதமராக இருக்கிறவர் புரிந்து கொள்ளாமல் பொய் சொல்கிறார் என்றால் இவர் ஒரு பிரதமராக இருக்கிறார், இந்த நாட்டில் நாமும் குடிமகனாக இருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் தலைகுனியக் கூடிய அளவிற்கு இருக்கிறது. தமிழ்நாட்டை கொஞ்சம் நஞ்சமாக அவர்கள் அவமானப்படுத்தினார்கள். கல்வித்துறை அமைசர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டுக்காரனுக்கு நாகரிகமே கிடையாது என்றார். அமெரிக்காவில் கருப்பின மக்கள் தாக்கப்படுவதை போல் இங்கேயும் தாக்கப்படுகிறார்கள் என்று சொல்லும்போது, தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கருப்பாக இருக்கிறார்கள், அவர்களோடு நாங்கள் வாழவில்லையா என்று பா.ஜ.க எம்.பி ஒருவர் சொன்னார். அமெரிக்காவின்கருப்பர்களுக்கு நிகராக தென்னாட்டுக்காரர்களை கருப்பர்கள் என்று பேசியவர்கள் பா.ஜ.ககாரர்களா இல்லையா?. ஆக தமிழன் என்றால் இவ்வளவு கேவலமா?.
கல்வித்துறைக்கு கிடைக்க வேண்டிய பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. ஒரு ரூபாய்க்கு 29 காசு தான் நமக்கு திருப்பி தருகிறார்கள். ஆனால், பீகாருக்கு ஒரு ரூபாய்க்கு ரூ.7 கொடுக்கிறார்கள். 20 ஆண்டு காலத்தில் 15 ஆண்டு காலம் பா.ஜ.க கூட்டணி ஆண்டிருக்கிறது. வளர்ச்சி அடைய முடிந்ததா? இதையெல்லாம் மக்கள் கேட்பார்கள் என்பதற்காக மோடி இப்படி திசை திருப்புகிறார். தமிழ்நாட்டு தேர்தல் என்றால் ஏதோ ஒரு குறளை சொல்லி அந்த குறள் தமிழுக்கும் புரியாது அவருக்கும் புரியாது. அப்படிப்பட்ட உளறுபடியான தமிழில் பேசி இங்கே ஏமாற்றுகிறார். இந்தி திணிப்பை நாங்கள் எதிர்த்தோமே தவிர எந்த காலத்திலும் இந்தி மொழியை எதிர்த்ததில்லை. இந்தி பேசுபவருக்கு நாங்கள் ஒருபோதும் விரோதி கிடையாது. இது தமிழருடைய பிரச்சனை, ஒவ்வொரு தமிழரும் இதை உணர்ந்து நிச்சயமாக மோடிக்கு எதிர்ப்பான கண்ட குரலை எழுப்புவார்கள். பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமான ஆட்சியை மோடி ஆட்சி நடக்கிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், எஸ்.ஐ.ஆர் பெயரால் இப்படி பல விதமான கையாண்டு இந்திய நாட்டினுடைய ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர்” என்று காட்டமாக விமர்சித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/31/modirs-2025-10-31-16-47-45.jpg)