R.S. Bharathi criticized tvk vijay
திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையைப் பின்வரும் மூன்று மாதங்களையும் கணக்கில் கொண்டு மொத்தமாக 5,000 ரூபாயை மகளிரின் வங்கிக்கணக்கில் நேற்று வரவு வைத்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இதை பல்வேறு கட்சிகள் ஆதரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தித்தார். இந்த சந்திப்பில், “மகளிர் உதவித் தொகையைக் கொடுப்பதற்குத் தடை விதிக்க சிலர் சதித் திட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் சதியை முறியடிப்பதற்காக, முதல்வர் இந்த 5,000 ரூபாய் உரிமை தொகை பணம் முன் அறிவிப்பின்றி மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை எனும் இந்த முடிவை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார். கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கருத்துக்களை ராகுல்காந்தி, கார்கே மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் அதற்கு நாம் பதில் சொல்லலாம். மற்றவர்களுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எங்கள் தலைவர் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
நாங்கள் விஜய்யை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதனால் அவரை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற மார்ச் 8 அன்று நடைபெறும், எங்கள் கட்சியின் மாநாடு பற்றி முதல்வர் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுவார். தேர்தல் அறிவிப்புகள் வரும் பொழுது அதற்கேற்றாற்போல் எங்கள் தலைவர் முடிவுகளை அறிவிப்பார். அண்ணல் அம்பேத்கருக்கு நாங்கள் தருகின்ற அளவிற்கு யாரும் மரியாதையைத் தருவது இல்லை. அம்பேத்கர் தான் எங்கள் வழிகாட்டி, அவரை நாங்கள் பின்பற்றி வருகிறோம். நாங்கள் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவதைத் தடுப்பதற்காக பாஜகவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். பீகார் தேர்தல் நடக்கும் சமயத்தில் பாஜக ஒன்றிய அரசு அம்மாநில அரசிற்கு நிதி வழங்கியது. அந்த பணத்தை வைத்துத் தான், அம்மாநில அரசு மகளிருக்கு 10000 பணம் வழங்கியது. ஆனால், பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு அப்படி நிதியையும் வழங்கவில்லை” என்று தெரிவித்தார்.
Follow Us