பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (02-11-25) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக, விசிக, தவாக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நாதக, தவெக, பா.ம.க (ராமதாஸ்), அமமுக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர்.

Advertisment

அதன்படி, கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அழைப்பு விடுக்கப்பட்டும் கூட்டத்திற்கு வராத கட்சிகள் பற்றி கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “வந்தவர்களே அதிகமாக இருக்கும்போது வராதவர்களை பற்றி கவலைப்பட்டால் பிரயோஜனம் இல்லை. வந்தவர்கள் பெருந்தன்மையோடு வந்திருக்கிறார்கள், வரவேற்கிறோம். அவர்களுக்கு ஜனநாயக உணர்வு இருக்கிறது. மற்றவர்கள் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை. என் பாணியில் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை நேரடியாக செய்ய முடியாது என்பதால் மறைமுகமாக வாக்காளார் பட்டியல் திருத்தத்தை செய்யப் போகிறார்கள் என்பது தான் இங்கு பங்கேற்ற அனைத்து கட்சிகளின் கருத்து” என்று கூறினார்.