சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்தப் புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பேருந்து முனையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி (31.12.2023) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில்தான் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15. 46 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. அதோடு மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சுமார் 1,964 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் கிளாம்பக்கம் பகுதி மக்களின் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மெட்ரோ ரயில் திட்டம் வேகமெடுத்துள்ளது. முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் சேவையானது பச்சை மற்றும் நீலம் என இரு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து 3 வழித்தடங்களில் 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் வழித்தடத்தின் நீட்டிப்பாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வழித்தடம் நீடிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.