‘குழந்தைகளுக்கு ரூ.12, பசுக்களுக்கு ரூ.40’ - விமர்சனத்துக்குள்ளான ம.பி அரசின் ஊட்டச்சத்து பட்ஜெட்!

mohanyadav

Madhya pradesh cm Mohan yadav

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஒதுக்கியுள்ள மத்தியப் பிரதேச அரசு, மாட்டு தீவனத்திற்கு ரூ.40 ஒதுக்கியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் எவ்வளவு என காங்கிரஸ் எம்.எல்.ஏ விக்ராந்த் பூரியா மாநில சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநில அரசு சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

மாநில அரசு வெளியிட்ட தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 1.36 லட்சம் குழந்தைகள் தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக உள்ளதாகவும், இவர்களில் 29,830 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், 1.06 லட்சம் பேர் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் ஒரு நாளைக்கு ரூ.8 முதல் ரூ.12 வரை ஒதுக்கப்படுவதாக மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு குறைந்த நிதியைக் கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு ஒழிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விக்ராந்த் பூரியா கூறுகையில், ‘ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ.8 முதல் ரூ.12 வரை செலவிடுகிறது. ஆனால் ஒரு நாளைக்கு மாட்டு தீவனத்திற்கு ரூ.40 ஒதுக்கப்பட்டுள்ளது. பால் லிட்டருக்கு ரூ.70 விற்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஒரே கூட்டத்தில் ஆயிரக்கணக்கான சிற்றுண்டி மற்றும் உலர் பழங்களை செலவிடுகிறார்கள். எலும்புகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல் உள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க ரூ.12 மட்டுமே கிடைக்கிறது. பட்ஜெட் போதுமானதாக இல்லை. இவ்வளவு குறைந்த நிதியைக் கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு ஒழிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

பற்றாக்குறையை ஒப்புக்கொண்டு மத்தியப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் நிர்மலா பூரியா, ‘தற்போதைய ஏற்பாடு போதுமானதாக இல்லை. நாங்கள் மத்திய அரசிடம் கூடுதலாக நிதியைக் கேட்டுள்ளோம்’ என்று கூறினார். ஷியோபூர், தார், கார்கோன், பர்வானி, சிந்த்வாரா மற்றும் பாலகாட் போன்ற பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் நிலைமை இன்னும் கவலையளிக்கிறது. பல மாவட்டங்களில், நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

budget Madhya Pradesh Nutrition
இதையும் படியுங்கள்
Subscribe