டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “(ரூ. 1,020,00,00,000) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை, தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக அரசின் அமைச்சர் கே.என். நெரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

Advertisment

கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும், இதெல்லாம் பனிப்பாறையின் முனை (Tip of the Iceberg - கண்ணுக்குத் தெரியும் ஒரு சிறிய பகுதி, உண்மையில் மிகவும் பெரிய, சிக்கலான அல்லது தீவிரமான ஒரு பிரச்சினையின் மிகச் சிறிய ஆரம்பம் மட்டுமே) தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை , இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது. வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

Advertisment

ஏற்கனவே  அமலாக்கத்துறை  அனுப்பிய ரூ. 888 கோடி  பணம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கிய (Cash For Jobs) முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு. தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம். பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் தாரளாமாக வழங்கலாம்.

kn-nehru-mks

அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம். இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி. உண்மையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisment