பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி (05.07.2024) தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு அண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 (A1) குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் குறிப்பிடப்பட்டிருந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வந்ததும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மறைந்த நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிகோரி அவரது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாகேந்திரனுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அஸ்வத்தாமனுக்கு வரும் 13ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.