சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியன்று தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் கருக்கா வினோத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.

அதனை தொடர்ந்து, ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் நேற்று (12-11-25) தீர்ப்பளித்தது. அதில், கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில்,  சென்னை நீதிமன்ற நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சி செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தி-நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் இன்று (13-11-25) சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கருக்கா வினோத் நீதிபதி மீது காலணி வீச முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், ரவுடி கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். நீதிபதி மீது காலணி வீச முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த ரவுடி கருக்கா வினோத், இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது நீதிபதி மீது காலணி வீச முயன்று அத்துமீறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.