கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களாகவே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் 'ரோலக்ஸ்' என்ற ஒற்றைக் காட்டு யானையால் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உறைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் மருதமலை அருகில் உள்ள சின்னமலை பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி ரோலக்ஸ் யானையால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று இரவு தோட்டத்தில் காவல் பணிக்காக சென்ற ராஜேந்திரனை அங்கு வந்த ரோலக்ஸ் காட்டு யானை தாக்கியுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தற்பொழுது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 நாட்களாக அச்சுறுத்தல் கொடுத்துவந்த ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த வனத்துறையினர் யானையை பிடிக்காமல் சொகுசு விடுதிகளில் தங்கியுள்ளனர் என்றும், யானை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட கும்கி யானைகள் வெறும் காட்சிப் பொருளாகவே வைத்திருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
அண்மையில் ராதாகிருஷ்ணன் யானையைப் பிடித்த வனத்துறை குழுவினர் இங்கு வரவழைக்கப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நேற்று கண்காணிப்பில் வனத்துறை ஈடுபடாததால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.