பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடி வருகிறது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார். அதேநேரம் பாமகவின் தலைவர் அன்புமணி 'வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்-ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!' என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் ராமதாஸால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கட்சிக் கொடியை ஏற்றி வைத்த ராமதாஸ் பின்னர் காரில் அமர்த்தப்படி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''வருகின்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறுவதற்காக கடுமையாக பாமக தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கடுமையாகப் போராட வேண்டும் என்றவொரு வேண்டுகோளை வைக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் என்னுடைய பாராட்டையும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Advertisment

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என அன்புமணி தெரிவித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''அது அவருடைய கருத்து'' என பதிலளித்தார்.