Robot detects criminals at train station
நம் நாட்டின் ரயில்வே துறையில் ரயில்வே காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது விசாகப்பட்டின ரயில் நிலையத்தில் மனித உருவிலான ரோபோ பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ ரயில் நிலையத்தில் உள்ள 8 நடை மேடைகள் உட்பட வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து சென்று பாதுகாப்பது பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோ தன்னிச்சையாகச் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் உள்ள 360 டிகிரி கேமராக்கள் நுட்பமாகக் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, அப்பகுதியின் அனைத்து காட்சிகளையும் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகிறது. அதன்படி, தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தகேக்கத்திற்குரிய நபர்கள் என, தன்னுடைய தரவுத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்களைக் கண்டறிந்து உடனுக்குடன் ரயில்வே பாதுகாப்புத் துறைக்குத் தகவல்களை அனுப்புகிறது.
இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த இரு குற்றவாளிகளை இந்த ரோபோ அடையாளம் கண்டு காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாக அவர்கள் கடப்பா சிவா மற்றும் பங்காரு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது, ஒடிசா மாநிலம் ராயகடா உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதம் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.
பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவல்கள் குறித்தும் அந்த ரோபோவிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ரோபோ தமிழ், தெலுங்கு, இந்தி மட்டும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தகவல்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரோபோவிற்கு ஏஎஸ்சி அர்ஜுன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us