நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று (18.09.2025) இரவு 08:30 மணியளவில் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ரோபோ சங்கர் தீபாவளி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் அவர்களின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/19/a5286-2025-09-19-09-49-26.jpg)