கோவையில் தங்க நகைப் பட்டறை நடத்தி வருபவர் சஞ்சய். அவரது பட்டறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், 80 கிராம் தங்கத்தை வேலைப்பாட்டிற்காக எடுத்துச் சென்றிருந்தார். அப்போது, அந்த ஊழியரிடம், "உன் குடும்பப் பிரச்சனைக்கு பரிகாரம் செய்ய வேண்டும்" என்ற பெயரில், விபூதி கலந்த நீரைத் தெளித்து, அவரிடமிருந்த தங்கத்தை வாங்கிக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக, சஞ்சய் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் சுங்கச் சாவடி கேமராக்கள் மூலம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மகாராஷ்டிரா நோக்கிச் சென்றது கண்டறியப்பட்டது. அங்கு விரைந்த தனிப்படைக் காவல்துறையினர், நாக்பூரில் ஒரு வாரம் முகாமிட்டு கொள்ளையர்களைத் தேடினர்.
அப்போது, சினிமாப் பாணியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினரைக் கண்டதும், கொள்ளையர்களின் குடும்பப் பெண்கள் கூச்சலிட்டு, காவலர்களைக் கால்களைப் பிடித்து தடுத்து, கொள்ளையர்களைத் தப்பிக்க வைத்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய காவல்துறையினர், கொள்ளையர்களைத் துரத்திச் சென்று யாஷிம் அலி, குர்பானி, பாரித் ஆகியோரை மடக்கிக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சலீம் அலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில், கைதானவர்கள் ஈரானி சமூகத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. 18 வயதுக்குக் குறைவானோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரைக் குறிவைத்து, பரிகார மந்திரங்கள் செய்வதாக மாயாஜாலம் செய்து, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளாக காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளாமல், தேசிய அளவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ஈரானி கொள்ளையர்களை மடக்கிக் கைது செய்த தனிப்படையினரை, கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.