தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் விஜய் தரப்பில் இருந்து நேற்று (30.09.2025) வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சாலைகளில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்குச் சர்வதேச அமைப்புகளான ஐ.நா. சபை மற்றும் உலக சுகாதார நிறுவனம், தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்டவை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால் அதில் எவற்றையும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பின்பற்றவில்லை. எனவே இந்த கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வல்லுநர் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுநர் குழு ஒன்றை அமைத்து உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதன்படி போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள் நடத்துவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் வகையிலும், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முன்வைப்பு தொகை, இழப்பீட்டுத் தொகை, குழு காப்பீடு (குரூப் இன்சூரன்ஸ்) என பல்வேறு விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
அந்த விதிமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். இதன் பிறகு இது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக த.வெ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாலைகளில் பொதுக்கூட்டம், தொண்டர்கள் சந்திப்பு, ரோட் ஷோ உள்ளிட்ட அனைத்து விதமான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதுவரையில் இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு வரும் 3ஆம் தேதி (03.10.2025 - வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.