திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியினரின் மகள் ரிதன்யா(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

Advertisment

புதுப்பெண் ரிதன்யா சேவூர் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, பூச்சி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு, தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில், ‘எனது மரணத்திற்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் செய்த சித்ரவதை தான் காரணம்’ என்று ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும்  கலங்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சேவூர் போலீசார், கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதால், நிபந்தனையின் பெயரில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவரையும் கைது செய்யவேண்டும் என வலிறுத்தல் கொடுக்கப்பட்ட நிலையில் சித்ரா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி குணசேகரன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.