திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா என்பவர் அண்மையில் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருமணம் ஆன 78 நாட்களிலேயே புதுமணப்பெண் தன்னுடைய தற்கொலை முடிவு குறித்து ஆடியோ வெளியிட்டு விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் ரிதன்யாவின் பெற்றோர்கள் வைத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறையில் உள்ள ஈஸ்வரமூர்த்தி, கவின்குமார், சித்ராதேவி ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்து விட்டதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், காலை மற்றும் மாலை மூவரும் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை வழங்கியுள்ளது.