மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதலில் 6 மாதங்களாக நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி, அதன் பின்னர் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஓராண்டாக அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், மணிப்பூரின் புதிய முதல்வராக பா.ஜ.க மூத்த தலைவரான யம்நம் கெம்சந்த் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யம்நம் கெம்சந்த் சிங் நேற்று (04-02-06) பதவியேற்றார்.

Advertisment

அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, கெம்சந்த் சிங் நேற்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து அவரது தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது. 

மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு நேற்று பொறுப்பேற்ற நிலையில், தற்போது சரன்சந்த்பூர் மாவட்டத்தில் இன்று பலத்த கலவரம் ஏற்பட்டுள்ளது. குக்கி இன மக்கள் அதிகம் வசிக்கும் சரன்சந்த்பூர் பகுதிக்கு சுயாட்சி கேட்டு குக்கி இன மக்கள் இன்று நள்ளிரவு முதல் முழு கடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று மாலை அப்பகுதியில் குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கூட்டத்தை கலைப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தண்ணீர் பீச்சியும், லத்தி சார்ஜ் மூலமாகவும் கலைக்க முயன்றனர்.

Advertisment

அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதம் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியும் பொதுச் சொத்துகளுக்கு தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும் அங்கு விரைந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.