பத்திரிகையாளரான ரினி ஆன் ஜார்ஜ் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, '916 குஞ்ஜூட்டன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு முக்கிய கட்சியின் இளம் அரசியல் தலைவர் தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு முக்கிய கட்சியின் இளம் தலைவராக இருக்கும் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், சில நாட்கள் கழித்து அவர் எனக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வா, உல்லாசமாக இருக்கலாம் என்று கேட்டார். இது எனக்கு மிகுந்த கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உடனே, “இது சரியில்லை; உங்களைப் பற்றி அனைவரிடமும் கூறி அம்பலப்படுத்துவேன்” என்று எச்சரித்தேன். ஆனால், அதனை எல்லாம் அலட்சியப்படுத்திய அவர், ‘Who cares? (யார் கவலைப்படுவார்?), நீ யாரிடமும் வேண்டுமானாலும் சொல்; என்னை ஒன்றும் செய்ய முடியாது,’ என்று அலட்சியமாகக் கூறினார்.”
இதுகுறித்து அவர் சார்ந்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “சரி மா, நீ ஒன்றும் பயப்படாதே; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,” என்றனர். அதன்பிறகு நானும் விட்டுவிட்டேன். ஆனால், பின்னர் அவருக்கு கட்சியில் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டு, தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரால் எனக்கு வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், மற்ற பல பெண்களும் அந்த நபரால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனால், அவர்கள் பயத்தில் வெளியே பேச முடியவில்லை. அதனால், நான் இதைப் பகிரங்கமாகப் பேச முடிவு செய்தேன்,” என்று கூறினார். செய்தியாளர்கள் அந்த நபர் யார் என்று கேட்டபோது, “சமூக வலைதளங்களில் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, எந்தவொரு முக்கிய ஊடகமும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு வலுவான பாதுகாப்பு உள்ளது. ஒருமுறை நான் புகார் செய்வேன் என்று கூறியபோது, ‘போய் புகார் செய்’ என்று நக்கலாக பதிலளித்தார்,” என்று ரினி கூறினார். இருப்பினும், அவர் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை. ஆனால், ‘Who cares?’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, இதுதான் அவரது அணுகுமுறை என்றார். உடனே பத்திரிகையாளர் ஒருவர், “பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மம்கூடத்தில்(Rahul Mamkootathil) தானா அந்த நபர்?” என்று கேட்டபோது, ரினி நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும், பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “ஜூன் 9 ஆம் தேதி இலங்கைக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சோசியல் மீடியாவில் எனது புகைப்படத்தை ராகுல் லைக் செய்தார். அதன்பிறகு என்னிடம் உரையாட ஆரம்பித்தவர், முதலில் எனது பயணம் குறித்து விசாரித்தார். ஆனால், பின்னர் அவரது வார்த்தைகள் தகாத முறையில் இருந்தன. அதனால், அவருக்கு பதிலளிப்பதை நிறுத்திக்கொண்டேன்,” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும், “நீங்கள் எனக்கு அனுப்பிய செய்திக்குப் பின்னால் உள்ள ஆபாசமான உண்மையை நான் அறிந்தேன்,” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், மற்றொரு பெண்ணின் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ராகுல் “‘Who cares?’ (யாருக்குக் கவலை?)” என்று அலட்சியமாக பதிலளித்திருந்தார். இதை மேற்கோள் காட்டி, ரினியின் குற்றச்சாட்டு ராகுலை குறிப்பிடுவதாக சமூக வலைதளங்களில் ஊகங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் CPI(M)-இன் இளைஞர் அமைப்பான DYFI ஆகியவை பாலக்காட்டில் ராகுல் மாம்கூடத்தின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, அவரது எம்.எல்.ஏ. பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினர்.
இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பூதாகரமாக மாறியிருக்கும் சூழலில், ராகுல் தனது கேரள இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மேலும், தான் எந்த வித சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், என்மீது எந்த பாலியல் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் குறித்து உள்கட்சி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் தெரிவித்தார். அண்மையில் கேரள திரையுலகில் நடிகைகள் கூறிய பாலியல் குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த நிலையில், தற்போது அரசியல் தலைவர்கள் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.