பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மாநிலத்தில் தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தள் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் தேர்தலில் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது. மறுபுறம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என்று பீகார் தேர்தல் களத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நடைபெற்ற தொகுதி பங்கீட்டு ஆலோசனையில், கூட்டணியில் உள்ள இதர கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. ஆனால், அதற்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்ததால் கூட்டணி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 71 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது. இதில், கூட்டணி கட்சிகள் ஆளுமையில் இருக்கும் பல தொகுதிகளை பா.ஜ.க எடுத்துக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக சிராக் பாஸ்வான் கேட்ட டானாபூர், லால்கஞ்ச், ஹிசுவா அர்வால் உள்ளிட்ட தொகுதிகளை அவருக்கு வழங்க மறுத்து தனது வேட்பாளர்களை பா.ஜ.க அறிவித்துள்ளது. அதே போல், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறியிருந்த மஹுவா தொகுதியை சிராக் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு ஒதுக்கியதால் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா அதிருப்தியில் உள்ளார்.
பா.ஜ.கவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது அனைத்து தேர்தல் நடவடிக்கையையும் நிறுத்து வைத்துவிட்டு உபேந்திர குஷ்வாஹா தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். குஷ்வாஹாவை பா.ஜ.க இரவு முழுவதும் சமாதானப்படுத்த முயன்றதாகவும், அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக உபேந்திர குஷ்வாஹா நேற்று இரவு அவசர அவசரமாக தலைநகர் டெல்லிக்குச் சென்றார். டெல்லி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உபேந்திர குஷ்வாஹா, “நான் டெல்லி செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சில ஆலோசனைகள் செய்யப்பட வேண்டும். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் டெல்லி செல்கிறேன். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.