வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பேரணாம்பட்டு, அரவட்டலா, கொத்தூர், பாஸ்மார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் நூறு ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், வனப்பகுதியில் உள்ள மலை கிராமமான அரவட்டலாவில், ஒரு விவசாயி ஐந்து ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், மலைப்பகுதியிலிருந்து வந்த மழைநீர் புகுந்து சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறியதாவது: "கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து, ஆசை ஆசையாகக் குழந்தை போலப் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது. செய்வதறியாமல், முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி, கண்ணீரோடு குடும்பத்துடன் சேர்ந்து, மாடுகளுக்காவது பயன்படுத்தலாம் என்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்," என்று கண்ணீருடன் கூறும் காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.