சென்னை ஆலந்தூரில் தனியாருக்குச் சொந்தமான பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல் உள்ள இடமானது குத்தகை இடத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலத்தின் குத்தகை காலம் முடிந்த பின்னரும் அந்த இடத்தில் ஓட்டல் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கு வந்து ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (27.10.2025) வெளியானது. அதில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்க  வேண்டும் என தீர்ப்பு வெளியானதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisment

இது சம்பந்தமாகச் செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்தரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன், செந்தில் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் அதிகாலையிலேயே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஹோட்டலில் இருந்த ஊழியர்களை  அங்கிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து அங்கிருந்த பெயர்ப் பலகைகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். அதோடு ஓட்டலின் இரு முகப்பு கதவுகளையும் பூட்டி சீல் வைத்தனர். வருவாய்த் துறை அதிகாரிகள் காலையில் ஓட்டலைப் பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இது தொடர்பாகச் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், “ஆலந்தூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் வழக்குப்படி செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், நெ. 07 புனித தோமையார்மலை கிராமம் புல எண்.1467/2-ல் விஸ்தீரணம் 40112 சதுரடி அரசு புறம்போக்கு காலம் கடந்த குத்தகை என வகைபாடு கொண்ட நிலத்தை 28.10.2025 இல் அரசுக்கு மீள எடுக்கப்பட்டது. இந்த நிலம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 கிரவுண்டு அளவு கொண்ட இந்த நிலம் சுமார் 300 கோடி மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது.