பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை, மருத்துவமனையிலேயே பெண் செவிலியர் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரமேஷ் சிங் (43). இவரது மாமியார், சிஎம்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி இரவு மாமியாரைப் பார்ப்பதற்கு ரமேஷ் சிங் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவர், அங்கு பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவரிடம் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமேஷ் சிங் மதுபோதையில் இருந்ததால் அவரை அந்த செவிலியர் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அடுத்த நாள் காலை திரும்பி மருத்துவமனைக்கு வந்த ரமேஷ் சிங், செவிலியர்களிடம் மீண்டும் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்.
தன்னுடன் தூங்குமாறு ஒரு செவிலியரிடம் கூறியதாகவும், மற்றொரு செவிலியரை பின் தொடர்ந்து தொலைப்பேசி எண்ணைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் செவிலியரிடம், ‘ரூ.5,000 தரேன் என்னோடு வா’ என்று பாலியல் ரீதியாகப் பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த செவிலியர், மருத்துவமனையிலேயே ரமேஷ் சிங்கின் சரமாரியாக தாக்கினார். மேலும் அவரின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இதையடுத்து, மருத்துவமனையின் உள்ளே இருந்த மற்றவர்கள் கூடி காவல்துறையினரை அழைக்குமாறு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி, போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், மருத்துவமனைக்கு வந்த போலீசார், ரமேஷ் சிங்கை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் ரமேஷ் சிங்கை பெண் செவிலியர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரமேஷ் சிங்கை பெண் செவிலியர் மீண்டும் மீண்டும் அறைவதும், காவல்துறையை அழைக்க வேண்டாம் என ரமேஷ் சிங் மருத்துவமனை ஊழியர்களிடம் கெஞ்சுவதும் இடம்பெற்றுள்ளது.