குட்காவை மென்று சாலையில் எச்சில் துப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டு உணவக உரிமையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரைச் சேர்ந்தவர் லெக்ராஜ் (25). இவர் அந்த பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு தனது உணவகத்தை மூடிவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன் சாலையில் நடந்துச் சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்களில் ஒருவர், குட்காவை மென்று சாலையில் எச்சிலை துப்பினார். அந்த எச்சில், லெக்ராஜ் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து லெக்ராஜுக்கும், அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாத்தில் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மூன்று பேர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லெக்ராஜ்ஜின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த லெக்ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பித்து ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, அந்த நபர்களை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் ராஜ் அஹிர்வார் (19), பவன் ரஜக் (20) மற்றும் ஜெகதீஷ் சிசோடியா (33) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment