Advertisment

‘தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சொற்ப நிதி’ - மத்திய அரசைக் கண்டித்து தமுஎகச மாநாட்டில் தீர்மானம்!

Untitled-1

சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள சி. வெங்கடேசன் நினைவு அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 16-வது கடலூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜானகி ராஜா தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் ஆர். ராகவேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அஞ்சலித் தீர்மானத்தை சங்கத்தின் நிர்வாகி கே.என். பன்னீர்செல்வம் வாசித்தார். மொழி வணக்கப் பாடலை ஆசிரியை செ. லட்சுமிபிரியா பாடினார்.

Advertisment

புதுச்சேரி தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் உமா, மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில துணைத் தலைவர் மூசா, சிதம்பரம் நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால்கி, செயல் அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து விவாதமும், நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றன.

புதிய நிர்வாகிகளாக, சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவராக பாரதிதமிழ் முல்லை, செயலாளராக ஜானகி ராஜா, பொருளாளராக பால்கி உள்ளிட்ட 27 மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமுஎகச புதுச்சேரி மாநில துணைத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, மாலையில் "கீழடி: நம் தாய்மடி" என்ற தலைப்பில் பொதுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முனைவர் பாரதிதமிழ் முல்லை அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் பால்கி தலைமை தாங்கினார். அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. பழனி வாழ்த்துரை வழங்கினார். "கீழடி: தமிழரின் தொன்மை" என்ற தலைப்பில் எழுத்தாளர் சொர்ணபாரதி, "கீழடி: சமய சார்பின்மை" என்ற தலைப்பில் முனைவர் அருணாச்சலம், "கீழடி: மானுட மேன்மை" என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் ஜே. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வரவேற்புக் குழு உறுப்பினர் சிதம்பரநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisment

மாநாட்டில், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, ராமகிருஷ்ணா, ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் மதச் சார்பின்மையை வலியுறுத்தி வெளியிடப்பட்ட 25 புத்தகங்களைத் தடை செய்ததையும், சமஸ்கிருத மொழிக்கு தாராள நிதியும், தமிழ் மொழிக்கு சொற்ப நிதி ஒதுக்கியதையும் கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Central Government chidamaram Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe