Request to protect the 'Madaichi Saathai' temple, which saved the village by giving its life! Photograph: (ramanathapuram)
ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள் இருக்கும் பழமையான சாத்தாயி கோயிலைப் பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜசூரியமடை அருகில் சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கில் பாழடைந்த நிலையில் சாத்தாயி கோயில் உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சங்கிலித் தொடர் போன்ற கண்மாய்களை எட்டாம் நாள் பிறை வடிவில் பாண்டியரும், சேதுபதிகளும் அமைத்து விவசாயத்தைப் பெருக்கினர். கண்மாய் மடையைத் திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் என்கின்றன கல்வெட்டுகள். இவர்கள் வெள்ளக் காலங்களில் நிரம்பியுள்ள கண்மாய் நீரால் கரை உடைந்து ஊர் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும்போது, நீரில் மூழ்கி மூச்சடக்கி, நீருக்கடியில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்துவிடுவர். வேகமாக வெளியேறும் நீர் அவரை உள் இழுக்கும். அதில் தப்பிப் பிழைத்தால் அவர் வீடு திரும்புவார். இல்லையேல் ஊருக்காக தன் இன்னுயிர் கொடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் மன்னர்களால் போற்றப்பட்டு, தெய்வமாக வணங்கப்படுவார்.
சங்க காலத்திலேயே மடை அடைக்கும் பணியை பெண்களும் செய்துள்ளதை கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் எழுதப்பட்ட மடைச்சி என்ற சொல் உணர்த்துகிறது. ராமநாதபுரம் அருகே, வட்டவடிவமான சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கிலுள்ள ராஜசூரியமடை, தனுக்காத்தமடை, பால்கரை ஆகிய ஊர்களின் விவசாயத்துக்காக சேதுபதி மன்னர்கள் புதிய மடைகளை அமைத்துள்ளனர். இதில் ராஜசூரியமடை, கி.பி.1676-ல் ராமநாதபுரத்தை ஆண்ட ராஜசூரிய சேதுபதி பெயராலும், அதன் அருகில் தனுக்காத்தமடை தளவாய் சேதுபதியின் தங்கை மகன் தனுக்காத்ததேவர் பெயராலும் உருவாக்கப்பட்டுள்ளது. மடைகளின் அருகில் உருவான ஊர்களும் அதன் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/01/a5411-2025-10-01-10-04-12.jpg)
ராஜசூரியமடை அருகில், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள், மடைத்தூண்களைக் கொண்டு அமைத்த பழமையான ஒரு சிறிய கோயில் உள்ளது. சிற்பம் ஏதுமில்லாத இக்கோயில், மடையைத் திறந்து மூடும் பணியைச் செய்தபோது, இறந்துபோன சாத்தாயி என்ற இளம் பெண்ணுக்கானது ஆகும்.
கிழவன் சேதுபதி காலத்தில், ஒரு மழைநாளில், உடையும் நிலையில் இருந்த சக்கரக்கோட்டைக் கண்மாயின் தெற்கு மடைக்குப் பொறுப்பாளரான சாத்தாயி, மடையைத் திறந்து நீரை வெளியேற்றியபோது, நீரில் மூழ்கி, உயிரிழந்துள்ளார். அதை நினைவு கூறும் விதத்தில், அவர் இறந்த இடத்தில், மடை போன்ற அமைப்பில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டில் இருந்த இக்கோயில் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. உயிர் கொடுத்து ஊரைக் காத்த சாத்தாயி கோயிலைப் பராமரித்துப் பாதுகாத்து காக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.