ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகில் பனஞ்சாயலில் உள்ள செங்கல் கோயில், நெற்களஞ்சியத்தை பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, ‘பனஞ்சாயலில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு மிகச் சிறிய கோயில் உள்ளது. பாண்டியர் கால கலை அமைப்பில் உள்ள இது மிகச் சிறிய கருவறை, அர்த்தமண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. கருவறை மேல் குவிந்த மாடம் உள்ளது. விளக்கேற்ற 3 மாடக்குழிகள் உள்ளன. இதன் வெளிப்புறச் சுவரில் மூன்று தேவகோட்டங்களும், 14 அரைத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் போதிகை, வீரகண்டம், பலகை, குடம் உள்ளிட்ட உறுப்புகள் செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. அரைத்தூண்களின் போதிகை வெட்டுப் போதிகையாக உள்ளது. நின்றநிலையிலான சிறிய சிற்பம் கருவறையில் இருந்திருக்கலாம். இது கி.பி.12 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

Advertisment

bri

தெற்குக் குடியிருப்பில் உள்ள ஒரு குளத்தைச் சுற்றிலும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கசடுகள், வட்டச்சில்லுகள், தேய்ப்புக் கல் ஆகியவை சிதறிக் கிடக்கின்றன. கருப்பு சிவப்பு நிறமுடைய குவளைகள், டம்ளர் மற்றும் சிறிய பானைகளின் உடைந்த ஓடுகளான இவை 2000 ஆண்டுகள் பழமையானவை. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த ஒரு நெற்களஞ்சியம் இக்குளத்தின் தெற்கில் கருவை மரங்களுக்குள் மறைந்து காணப்படுகிறது. முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டுள்ளது. செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியத்தின் நடுவில் சுவர்கள் கட்டி மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இதில் மூன்று வாயில்கள் உள்ளன. சுவர்களின் மேற்பகுதியில் மேற்கில் 3, கிழக்கில் 3, தெற்கு, வடக்கில் தலா ஒன்றுமாக சிறியதாக ஐந்து ஜன்னல்கள் உள்ளன. மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

தரையில் இருந்து இரண்டு அடி உயரத்துக்கு கருங்கற்களால் தரைதளம் அமைத்து அதன்மேல் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. தரைக்கும் கருங்கல் தளத்துக்கும் இடையே வெற்றிடம் உள்ளது. இதனால் தரையின் ஈரம் நெல்லை பாதிக்காது. நெல் போட்டு வைப்பதால் இதன் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு விடாதபடி அதற்கு முட்டுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. களஞ்சியத்தின் முன் குப்பைகள் போடப்பட்டுள்ளதாலும் கருவை மரங்கள் அடர்ந்துள்ளதாலும் சேதமடைந்துள்ளது. இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பேருந்து நிறுத்தம் அருகில் மேடை அமைத்து வட்டவடிவ ஆவுடையுடன் லிங்கம், விநாயகர் சிற்பங்கள் கோயிலாக வழிபடப்படுகிறது. பிற்காலச்சோழர் ஆட்சியின் போது இங்கு ஒரு சிவன் கோயில் இருந்திருக்கலாம்’ என்று கூறினார்.

Advertisment