புதுக்கோட்டை மாவட்டம்கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோயிலுக்குப் பின்பக்கம்கீரமங்கலம் - கொத்தமங்கலம் சாலை அருகில் 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியின்சிமெண்ட் தூண்கள் உடைந்து சேதமடைந்து உள்ளது. ஒரு தூண் முழுமையாக அடிப்பகுதி உடைந்து 3 உடைந்த தூண்களின் பலத்தில் நிற்கிறது. இந்த பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில ஆண்டுகள் வரை தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த தொட்டி எந்த நேரத்திலும் உடையும் நிலையில் உள்ளதால் பெரிய ஆபத்துகளைத் தடுக்க உடனடியாக தண்ணீர் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் தான் அதே ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்சிகா .லெனின் துறை அதிகாரிகளுக்குப் பல ஆண்டுகளாகப் பல மனுக்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாததால் இன்று (16.09.2025 - செவ்வாய்க்கிழமை) ஆபத்தான தண்ணீர் தொட்டியை அகற்றும் வரைதிருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். இந்த அறிவிப்பையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.