தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையைச் சேர்ந்தவர் டிரைவர் கருணாகரப் பாண்டியன். இவரது மனைவி முத்துச்செல்வி. தம்பதியருக்கு பிபிஏ படித்து வரும் சிவபிரகாஷ் என்ற மகனும் பி.எட் படித்து வரும் சிந்தியாராஜம் என்ற மகளும் உள்ளனர். கருணாகரப் பாண்டியனின் தாயார் ராஜம்மாள் கடந்தாண்டு மார்ச்சில் இறந்துவிட்டார். அவரது பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்கக் கோரி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதிகாரிகளோ ராஜம்மாளின் பெயரை நீக்காமல் கருணாகரப் பாண்டியன் அவரது மனைவி முத்துச்செல்வி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பெயர்களையும் எந்தவித ஆவணமும் இல்லாமல் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். 

Advertisment

அதோடு நால்வரின் ஆதார் அடடைகளையும் முடக்கி அவற்றை தகுதியிழப்பு செய்யக்கோரி சென்னையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகத் தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இந்த கார்டிற்காக வழங்கப்பட்ட செல்போன் எண்ணையும் பதிவிலிருந்து நீக்கியுள்ளனர். இதனால் கல்லூரிகளில் உயர் கல்வி படித்து வரும் சிவபிராகசும் சிந்தியா ராஜமும் தங்களின் கல்வியைத் தொடர்வதற்கான ஆவணங்கள் கிடைக்காமல் அங்குள்ள வட்டார அலுவலகத்தில் அதிகாரிகளோடு போராடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிவாரண உதவிகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். 

Advertisment

இந்த விவகாரம் குறித்து திருச்செந்தூர் வட்ட வழங்கல் அதிகாரியோ, பாதிக்கப்பட்டவர் பரமன் குறிச்சியிலுள்ள தனியார் இ-சேவை மையத்தில் தாயார் பெயரை நீக்க மனு அளித்துள்ளார். ஆனால் அங்கு தவறுதலாக இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து தவறு கண்டறியப்பட்டு அவரிடம் மனு பெற்று அதற்கான பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார். அதிகாரிகள் மட்டத்தில் நடந்த ஒரு சிறிய தவறு வாழவேண்டிய குடும்பத்தை முடக்கிப்போட்டதுதான் வேதனையிலும் வேதனை.