சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் மின் கம்பத்தில் விழுந்து மின் கம்பிகள் அறுந்து, அருகே இருந்த குடிசை வீடுகளில் மரமும் மின்கம்பிகளும் விழுந்தன. இதில் வீடுகளில் இருந்த மரியசூசை (70), அவரது மனைவி பிளவுன்மேரி (60), அவரது அண்ணி வனதாஸ்மேரி (70) ஆகியோர் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் கனகராஜ் என்பவர் படுகாயமடைந்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“இவர்கள் அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள்; இவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்ற விபத்துகளுக்கு அறிவிப்பது போல் நிவாரணம் அறிவிக்காமல் கூடுதல் நிவாரணமாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலை சிதம்பரம் மருத்துவமனைக்கு வந்த தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், வருவாய்த் துறை சார்பில் தலா ரூ.4 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என வாய்மொழியாக அறிவித்தனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் செல்லையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க தமிழொளி, நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோர் ஏற்க மறுத்து, எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் சிதம்பரம் வட்டாட்சியர் கீதா மின்துறை அலுவலர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகு கடிதமாக வழங்கினார். இதில் படுகாயமடைந்த கனகராஜுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/4-2025-11-24-18-12-30.jpg)