‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை தனியார் விடுதியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து, தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில், பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்போது, ‘’பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலரும் தென்னை விளைச்சல் பல்வேறு நோய் காரணமாக குறைந்துள்ளது" என்று எடப்பாடியிடம் கூறினார்கள்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நிலை தமிழகத்தின் பல இடங்களிலும் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளாண் ஆராய்சிக் கழகம் மூலமாக இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, தென்னை விவசாயிகளைக் காத்தோம்.
நான் முதல்வராக இருந்தபோது கஜா புயல் இப்பகுதியை புரட்டிப் போட்டது. தென்னை மரங்கள் கஜா புயலால் ஒடிந்து விழுந்தன. அதையெல்லாம் நேரடியாக பார்த்தேன். ஒடிந்து விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தோம் நிவாரண உதவியும் கொடுத்தோம். மறு சாகுபடி செய்யவும் நிவாரண நிதி கொடுத்தோம். விவசாயிகள் தொடக்க வேளாண் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை 2 முறை எங்கள் ஆட்சியில் தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம். பயிர்க் காப்பீட்டு திட்டம், தட்டுப்பாடில்லாமல் உரம் கொடுத்தோம். உழவன் செயலி உருவாக்கி அதன்மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தோம்.
அதேபோல் மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். கஜா புயலின்போது ஏராளமான படகுகள் சேதமடைந்தன. அதற்கு நிவாரண நிதி கொடுத்தோம். வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.
மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று பலரும் கேட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அது உயர்த்தப்படும். ஜெயலலிதா இருக்கும்போது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் மீனவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. அதுவும் முறையாக வழங்கப்படும். பட்டுக்கோட்டை பேராவூரணியில் விவசாயிகள், மீனவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்…’’ என்று உறுதி அளித்தார்..
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/24/d-2025-07-24-16-44-44.jpg)