சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு திருமணம் செய்ய மறுப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று தெரிவித்து குற்றம்சாட்டப்பட்டவரை சூரஷ் செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Advertisment

குஜராத் மாநிலம், டிண்டோலியைச் சேர்ந்த பிபிஏ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 2022இல் கட்டர்காமைச் சேர்ந்த எம்.டெக் மாணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகியதாகவும், அதன் பின்னர் திருமணம் செய்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவில் இருந்ததாகவும், அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது இளைஞர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஷ்வின் ஜே ஜோகாடியா, உடலுறவில் எந்தவித கட்டாயப்படுத்துதலும் இல்லை என்றும் காதல் முறிவால் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று முந்தைய உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற நீதிபதி, ‘புகார்தாரர் ஒரு படித்த பெண். அவரால் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் சாதி வேறுபாடுகள் இருப்பதால் இந்த திருமணத்தை மறுத்துள்ளனர். இருப்பினும், புகார்தாரர் தானாக முன்வந்து உறவை தொடர்ந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருடன் தங்கியிருந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் அந்த பெண் தனது அடையாள ஆவணங்களில் விருப்பத்துடன் வழங்கியுள்ளார். இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை என்று தெரிகிறது. உறவின் போது கர்ப்பமாக இருந்ததாக அந்த பெண் கூறினாலும் வழக்கு விசாரணையின் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் டிஎன்ஏ அறிக்கைகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் புகார்தாரருக்கும் இடையே எந்த தொடர்பையும் நிறுவவில்லை. மேலும், சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு திருமணம் செய்ய மறுப்பது பாலியல் வன்கொடுமைக்கு சமமாகாது’ என்று கூறி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தார்.