இந்தியா முழுவதும் வரும் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இயங்கி வரும் ஒரு பல்கலைக்கழகத்தில் இந்து மாணவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்து மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 18ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தீபாவளி கொண்டாட இந்து மாணவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அக்டோபர் 17ஆம் தேதி ஒரு முக்கிய நிகழ்வு இருப்பதால், அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தை நடத்துமாறு பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் அகில் குஷால், அனுமதி கொடுக்காவிட்டால் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் தீபாவளி கொண்டாடுவோம் என பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அகில் குஷால் எழுதிய கடிதத்தில், ‘ஹோலி கொண்டாட்டங்களின் போது எங்களுக்கு அனுமதி வழங்காததன் மூலம், பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே ஒரு தவறைச் செய்துள்ளது. அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், மீண்டும் அத்தகைய தவறை செய்ய மாட்டார்கள். இன்னும் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால், பல்கலைக்கழகத்தின் இந்து மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் தீபாவளியை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணைவேந்தரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகியும், பேராசிரியருமான வாசிம் அலி, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நிகழ்வை ஏற்பாடு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. எனவே அனுமதி கொடுப்பதற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுவதுற்கு எந்த அர்த்தமும் இல்லை. அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாட அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் ஒரே கவலை. ஆனால் அக்டோபர் 17 ஆம் தேதி ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அக்டோபர் 18 ஆம் தேதி இடத்தை சுத்தம் செய்ய முடியாது. அதனால், தீபாவளிக்கு பிறகு ஒரு நாள் அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் பண்டிகையை கொண்டாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாணவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக உள்ளதால் ஹோலி பண்டிகைக்கு வெடித்த போராட்டம் போல், மீண்டும் நடக்கும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் 9 அன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஹோலி பண்டிகையை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து ஒரு சர்ச்சை வெடித்தது. இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, பல மாணவர்களும் அகில பாரதிய கர்ணி சேனா உறுப்பினர்களும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்த விஷயத்தில் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியது. இறுதியில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஹோலி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.