சித்தரிக்கப்பட்ட படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் காப்புகாட்டில் கடந்த 7ஆம் தேதி மர்ம கும்பல் மூன்று செம்மரங்களை வெட்டி கடத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு கடத்தல்காரர்களை அரக்கோணம் வன சரகர் தமிழரசன் தலைமையிலான வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த 3 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதில் திமுக பிரமுகரின் ஓட்டுநரான திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ், உட்பட இரு வாலிபர்களை கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து 1 டன் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஒரு வாலிபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். செம்மர கடத்தல்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பால் குறைந்து இருந்த நிலையில் தற்போது செம்மர வெட்டி கடத்தல் துவங்கி உள்ளதால் வனத்துறையினர் வனகாப்பு காடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Follow Us