அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். மீண்டும் 2011ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

Advertisment

கடந்த பிப்ரவரி 9ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது. 

eps-sengottaiyan

அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார். இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார். ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 

Advertisment

இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ. செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ. செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார். 

sengottaiyan-mic

மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ .செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே இன்று (02.09.2025) காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் காலை முதலே பல்வேறு தொலைக்காட்சி நிருபர்கள் திரண்டு இருந்தனர். 

Advertisment

முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா? என்று எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு புறநகர் அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆதரவாளார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்எல்ஏ, பதினாறு ஒன்றிய செயலாளர்கள், உட்பட பல்வேறு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது :-வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று கூறி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.