இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக ஆம்னி பேருந்து கட்டணம் 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆம்னி பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் சார்பில் நேற்று (14.10.2025) காலை அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், “கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகச் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் ஆம்னி பேருந்து போக்குவரத்து சங்கத்தினர் சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஆம்னி பேருந்து கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக சுமுக முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ரூ. 3000 வரை இருந்த பேருந்து கட்டணங்கள் தற்போது ரூ. 1,700 ஆக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ. 4000 இருந்த கட்டணம் தற்போது ரூ. 2000 குறைக்கப்பட்டிருக்கிறது.