தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
அதற்கென புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு அவசர தேவைகள் மற்றும் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 1077 அல்லது 04322 -222207 என்ற நம்பரையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு அவசர கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்றது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.