தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இன்று 21ஆம் தேதி அக்டோபர் காலை 5:30  மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் எட்டரை மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 22ஆம் தேதி அக்டோபர் மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உண்டு. இது 23ஆம் தேதி அக்டோபர் மேற்கு மற்றும் வடமேற்கில் இருந்து தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதி நோக்கி மேலும் வலுவடையும் வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு தீவிர நிலைக்கு செல்லும் என சொல்ல முடியும். நாளைக்கு தான் புயலாக மாறுமா என்பதை ஓரளவுக்கு சரியாக சொல்ல முடியும். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் தங்கச்சிமடத்தில் 17 சென்டிமீட்டர் மழையும், பாம்பன் 15 சென்டி மீட்டர், மண்டபம் 14 சென்டிமீட்டர், ஈரோடு மாவட்டம் வரட்டுபள்ளத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 22 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது'.

Advertisment

நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.