சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக மூத்த நீதிபதியாகப் பதவி வகித்து வருபவர் எம். சுந்தர். இந்நிலையில் நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. எனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து இவர் மணிப்பூர் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார்.
நீதிபதி எம்.சுந்தர் கடந்த 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பின் முதல் பேட்சை சேர்ந்தவர் ஆவார். இவர் 1989 இல் வழக்கறிஞராகச் சேர்ந்தார். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். உரிமையியல் வழக்குகளில் ஆழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 05.10.2016 அன்று பதவியேற்றார்.