சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவேற்காட்டை சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட் செய்து வந்த சிவகுமார் இன்று மாலை பள்ளியில் பயின்று வரும் தன் குழந்தைகளை அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக பாதி வழியில் ஆட்டோவில் இருந்து இறங்கிய நிலையில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிவகுமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றனர். அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக திருவேற்காடு காவல்நிலையத்திற்கு புகாரளித்த நிலையில் அங்கு வந்த போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதது அந்தப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொழிலில் பணம் கொடுக்கல் வாங்கல் முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.