R.B. Udayakumar's interview after meeting Premalatha for alliance
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அதன்படி, கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக மற்றும் பா.ம.க , கூட்டணியில் இருந்து விலகி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார். முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்பி இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அதிமுக தலைமை அதை மறுக்க, அதிருப்தியில் இருந்த பிரேமலதா அதன் காரணமாகவே கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையில் இன்று (17-11-25) தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரைக்குச் சென்று பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அந்த மண்டபத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகை தந்து பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பிரேமலதாவுடன் கூட்டணி தொடர்பாக சந்திப்பு நடந்ததாக எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், “எந்தவிதமான முடிவாக இருந்தாலும் பொதுச் செயலாளர் எடப்பாடு பழனிசாமி எடுக்கிற முடிவு தான். அது குறித்து நான் எதுவும் பேசவில்லை. பிரேமலதாவின் தாயார் இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன் அவ்வளவு தான்” என்று கூறிச் சென்றார்.
Follow Us