கொடுநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து அமமுக பொதுச் செயலாலர் டி.டி.வி. தினகரன் பல்வேறு பரபரப்பு தகவல்களை நேற்று (06.11.2025) செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று (07.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் டி.டி.வி. தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில், “உங்களை (டி.டி.வி. தினகரனை) நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டு இன்றைக்கு அரசியல் ஆதரவற்றவர்களாக, அரசியல் அனாதைகளாக அடையாளம் இழந்து நிற்கிறார்களே அது பற்றி ஏதேனும் நீங்கள் சிந்தித்தது உண்டா?. உங்களை நம்பியே வாழ்க்கையை அர்ப்பணித்தாரே சென்னையில் வெற்றிவேல், மேலூர் தொகுதியிலே மேலூர் சாமி ஆகிய இருவரும் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்களே அவர் தியாகத்தைப் பற்றி என்றைக்காவது நீங்கள் சிந்தித்தது உண்டா?. 

Advertisment

அதற்காக நேரம் ஒதுக்கியது உண்டா?. அது பற்றி தொண்டரிடத்திலே பேசியதாவது உண்டா?. அவர்களுடைய தியாகத்தைப் பற்றி நீங்கள் சொன்னது உண்டா?. இன்றைக்கு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாருக்கு வாரிசைப் போல டி.டி.வி. தினகரன்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியையும், ஆட்சியையும் அபகரிக்க அவர் திட்டம் தீட்டினார். இதுதான் உண்மை. டிடிவி தினகரன் அவருடைய பருப்பு எடப்பாடி பழனிசாமி இடத்திலே வேகவில்லை. இதுதான் உண்மை. அதனால்தான் இன்றைக்கு இன்னும் ரொம்ப கொச்சையாகச் சொல்கிறேன். கட்சியை ஆட்டையைப் போட பார்த்தார். அவரால் அது முடியவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாக, அந்த வேதனையின் வெளிப்பாடாக, அந்த இயலாமையின் வெளிப்பாடாக இன்றைக்கு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார். 

Advertisment

உனக்கு என்னப்பா நீ பைத்தியம். எதை  வேண்டுமானாலும் பேசலாம் அப்படி என்கிற மாதிரி. அவர் மீது ஜெயலலிதா 10 ஆண்டுகள் நடவடிக்கை எடுத்ததினால் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டாரோ என்கிற ஒரு கவலை அவருடைய தம்பிமார்களான எங்களுக்கெல்லாம் ஏற்பட்டுள்ளது. எப்படி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் பேசுவாரோ அப்படிப் பேசுகிறார். ஏனென்றால் ஜெயலலிதா அவரை 10 ஆண்டுக் காலம் தனிமைப்படுத்தி வைத்திருந்தார். தனிமை சிறை போன்று. ஆகவே அவரோடு உடன் பிறக்கவில்லையே என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட தம்பிமார்களான நாங்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு பொது வாழ்க்கையிலே இப்படி ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டதோ என்கிற மிகப்பெரிய கவலை எங்களுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவர் பேசுகிறார் கொடநாடு வழக்கு பற்றி. 

eps-mic-3

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கிற போது கொடநாடு வழக்கு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது குறித்து சட்டமன்றத்திலே மிகப்பெரிய நீண்ட விவாதம் நடைபெற்றது. அது சட்டசபையின் பதிவில் இருக்கிறது. இவர் சட்டசபைக்கு வந்தது இல்லை. வந்தாலும் இருக்கிறது இல்லை. அதனால் சட்டசபை பதிவுகளைப் படித்துவிட்டு வேண்டுமானால் அவர் இது குறித்துப் பேசலாம். அவர் என்ன சொல்கிறார்?. எம்.எல்.ஏ.க்களை பற்றி, அமைச்சர்களைப் பற்றி தண்டவாளங்களைப் பற்றி வண்டவாளங்களைப் பற்றி அவருடைய லீலைகளைப் பற்றி உளவுத்துறை கொடுத்தது எல்லாம் உத்தம புத்திரன் படித்துக் கிழித்துப் போட்டாராம். எவ்வளவு ஒரு கீழ்த்தரமான ஒரு சிறுமைப்படுத்துகிற ஒரு எண்ணம்” எனப் பேசினார்.

Advertisment