அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செங்கோட்டையன் மற்றும் டி.டி.வி. தினகரனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அந்த விடியோவில், “எழுச்சி பயணத்தினால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி அழைத்துச் செல்வதை ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். தங்களுடைய இயலாமையினாலே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பொறாமை.
அந்த பொறாமை தீயினாலே இன்றைக்கு அவர்கள் தங்களை தாங்களே இன்றைக்குத் தடம் மாற்றிக் கொண்டு அதி முவில் ஒற்றுமை என்கிற பெயரை வைத்துக்கொண்டு அதிமுகவிற்கு விண்ணளவு உயர்ந்து கொண்டிருக்கிற அந்த செல்வாக்கிலே ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காண்கிற வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கெல்லாம் தோல்வியைத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மூலம் தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் தருவார்கள். பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாகச் செய்தி எழுதுகின்றன. எழுச்சி பயணத்தை மடை மாற்றுவதற்கு வயிற்றெரிச்சல் மனிதர்கள் எல்லாம் இங்கே சென்றார்கள் அங்கே சென்றார்கள் , அவரை சந்தித்தார்கள் . எதற்குச் சந்தித்தார்கள்?.
அவர்தான் இங்கே எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திலே விருந்து சாப்பிட்டுவிட்டு ஜெயலலிதா ஆட்சி மலருவதற்கு அதிமுகவும், பாஜக என்ற தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து இன்றைக்கு வலிமையாகப் பறைசாற்றி வெற்றி பயணத்திலே இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிறோமே. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு அதிமுக தொண்டர்கள் தங்கள் உழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவின் ஜெயலலிதாவின் மீண்டும் இரட்டை இலை ஆட்சி மலருகிற தீர்ப்பின் மூலமாகத்தான் பதில் சொல்ல முடியுமே தவிர அதற்கு வேறு எந்த பதிலும் சொல்ல முடியாது.
எத்தனை எத்தனை சக்திகள். எத்தனை எத்தனை இயலாமைகள். எத்தனை எத்தனை ஆற்றாமைகள். எத்தனை எத்தனை வயிற்றெரிச்சல்கள். எத்தனை எத்தனை பொறாமைகள். அதைத் தொண்டர்களுடைய ஒற்றுமையாலே உழைப்பாலே தூள் தூளாக்குவோம். அவரை மாற்றுவோம். இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்கள் எல்லாம் மாற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டினுடைய பாதுகாவலராக எட்டு கோடி தமிழர்களுடைய ஒரே நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி தான் என்பதைக் காலம் தீர்ப்பு சொல்லும். மக்கள் அந்த தீர்ப்பைத் தருவதற்குத் தயாராகி இருக்கிறார் ” எனத் தெரிவித்துள்ளார்.