தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது. மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்தும், பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

திமுகவையும், பா.ஜ.கவையும் தாக்கி பேசிய அதே வேளையில் அதிமுகவையும் விஜய் விமர்சித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் யார் தெரியுமா? அவர் மாஸ் என்ன என்று தெரியுமா? அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் அந்த முதல்வர் நாற்காலியை பற்றி ஒருத்தர் கூட நினைத்துப் பார்க்கவில்லை, கனவுக் கூட காண முடியவில்லை. எப்படியாவது அந்த சிஎம் நாற்காலியை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர் திரும்பி வந்ததற்கு பிறகு அந்த நாற்காலியை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என தனது எதிரியைக் கூட மக்கள் கிட்ட கெஞ்ச வைத்தார். ஆனால், அவர் ஆரம்பித்த கட்சியை இப்போது கட்டி காக்கிறது யார்?. இன்றைக்கு அந்த கட்சி எப்படி இருக்கிறது?. அதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கிறார்கள்.

2026இல் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், எப்படிப்பட்ட ஆட்சி இங்கு அமைய வேண்டும் என்றும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், என்ன வேஷம் போட்டுக்கொண்டு பா.ஜ.க தமிழ்நாட்டுக்கு வந்தாலும், அவர்கள் வித்தை எல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது. இப்படி பொருந்தாக் கூட்டணியாக பா.ஜ.க கூட்டணி இருப்பதால் வெற்று விளம்பர மாடல் திமுக, பா.ஜ.கவுடன் உள்ளுக்குள் ஒரு உறவு வைத்துக்கொள்கிறது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். மாநாட்டில் அதிமுகவை விஜய் விமர்சித்து பேசியிருந்ததது, அதிமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு” என்று கூறினார்.