சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் 7-வது ஊதியக்குழு நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் நிநிறுவனங்களிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பண பயன்களை உடனே வழங்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே பூர்த்தி செய்ய வேண்டும், துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகல் என தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேராசிரியர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வீரபாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள். சமூக நல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் 4-ம் நாள் போராட்டக்களத்தில் விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிக்குமார் பேராசிரியர்கன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் மொழி வளர்ச்சிக்காக நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சுவாமி சகஜாநந்தர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தில் துவக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம். நூற்றாண்டு காண இருக்கும் அந்தப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பிறகு அதிமுக அரசு அந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தனர். ஆனால் இப்போதோ முன்பிருந்ததில் பாதி எண்ணிக்கையில் கூட மாணவர்கள் இல்லை. அங்கு செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத அணுகுமுறை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அதில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் ஒன்று. அதனால் அதன் நிர்வாகம் முடங்கிப் போயிருக்கிறது. இந்தியாவில் உயர் கல்வியில் தமிழ்நாடு தலை சிறந்து விளங்குவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ஒரு காரணமாகும். அத்தகையப் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம் இப்படி சீர் குலைந்து கிடப்பது வேதனை அளிக்கிறது.
தற்போது அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் கனிவோடு பரிசீலித்து நிறைவேற்றித் தர வேண்டும்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/01-2025-11-13-18-11-39.jpg)