சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்விக்கான “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025”- ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (08.08.2025) வெளியிட்டார். அதில் பொதுத் தேர்வுகளை மாற்றியமைத்தல் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், “10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும், பொதுத்தேர்வுகளை தொடர்ந்து நடத்துதல், தொடர்ச்சியான, திறன் அடிப்படையிலான அகமதிப்பீடுகள் மூலம் பாடப்பொருள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் கல்விசார் ஆயத்தநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாணவர்கள் 11ஆம் வகுப்பில் பயிலும் ஆண்டினை அவர்களை ஆயத்தப்படுத்தும் மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் ஆண்டாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த அணுகுமுறை தேர்வு சார்ந்த மன இறுக்கத்தைக் குறைக்க உதவுதோடு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மாணவர்கள் சிறப்பாகத் தயாராவதை உறுதி செய்து, அவர்கள் பாடக்கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தும். மேலும், இது மேல்நிலை வகுப்புகளில், சமநிலையான, மாணவர்நேய மதிப்பீட்டு அமைப்பினையும் மேம்படுத்தும். மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, பாடக்கருத்துகளைப் புரிந்துகொண்டமை, பெற்ற அறிவினை புதிய சூழல்களில் பயன்படுத்துதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் பொதுத்தேர்வுகளை சீரமைக்க வேண்டும். வாய்மொழித்தேர்வுகள், செயல்முறைத்தேர்வுகள், குழுச் செயல்பாடுகள், செயல்திட்டப் பணிகள் போன்ற பல்தரப்பட்டக் கூறுகளைக் கொண்டதாக மதிப்பீட்டு முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
கல்வித் தரநிலைகளைப் பேணும் அதேநேரம் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத்தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்படிருந்தது. இந்நிலையில் விசிக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான து. ரவிக்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலக் கல்விக் கொள்கையில் தவறான முடிவு இன்று (அதாவது நேற்று - 08.08.2025) வெளியிடப்பட்டிருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையில் 11ஆம் வகுப்பில் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு. இது மேல் நிலைக் கல்வியை மட்டுமின்றி உயர்கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.